search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    தேர்தல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

    தேர்தல் நிதி பத்திரங்களுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கும், தேர்தல் கமி‌‌ஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடைகள் பெறுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நிதி பத்திரங்கள் (‘எலெக்டோரல் பாண்ட்ஸ்’) வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது.

    இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்புகளால் வாங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்கு கிடைக்கும்.

    தனி நபர்கள் அல்லது இந்தியாவில் உள்ள அமைப்பினர் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். அந்த பத்திரங்களில் வாங்கியவரின் பெயர் இருக்காது. வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று, அந்த நன்கொடையை பெற்ற அரசியல் கட்சிக்கு தெரியாது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.

    மத்திய அரசு

    இந்த நிலையில், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்துக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆளும் கட்சியினர் சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் நிதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தேர்தல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌‌ஷண் வாதாடுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட மூல வழக்கின் மீதான விசாரணை ஏற்கனவே நிலுவையில் உள்ளதாகவும், ஆனால் ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பும் தேர்தல் நிதி பத்திரத்தை அரசாங்கம் வெளியிடுகிறது என்றும் கூறினார்.

    அத்துடன், டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணம் ஆளும் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தேர்தல் நிதி பத்திரங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.

    அதற்கு நீதிபதிகள், மூல வழக்கில் தேர்தல் நிதி பத்திரங்கள் வழங்கும் திட்டத்துக்கு இடைக்கால தடை வழங்கப்படவில்லை என்பதால் இப்போதும் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறினார்கள். இந்த வழக்கு 4 வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    உடனே பிரசாந்த் பூ‌‌ஷண், டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தால் அதற்குள் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் மாற்றப்பட்டு விடும் என்றும், இந்த திட்டமே சட்டத்துக்கு புறம்பானது என்பதால் இதற்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் கமி‌‌ஷனுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×