search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவராக தேர்வான நட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜகவினர்
    X
    தலைவராக தேர்வான நட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜகவினர்

    பா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா

    பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா பதவி வகித்து வருகிறார். அக்கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா செயல்பட்டு வருகிறார்.

    2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி, பாரதிய ஜனதா கட்சிக்கு அமித் ஷா தலைவர் ஆனார். அவரது தலைமையில் கட்சி, நல்லதொரு வளர்ச்சியை பெற்றது. அவரது தலைமையில்தான் 2019 பாராளுமன்ற தேர்தலை கட்சி சந்தித்தது. அதில், முந்தைய 2014 தேர்தலைவிட கூடுதல் இடங்களை பிடித்து பாரதீய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

    அப்போது கட்சிக்கு தேர்தல்களில் தொடர் வெற்றியை தேடித்தந்த நிலையில் அமித் ஷா, பிரதமர் மோடியின் 2-வது அரசில் உள்துறை மந்திரி ஆனார். ஆனாலும், அவர் கட்சிப்பதவியில் தொடர்ந்தார். அவருக்கு உதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

    அந்தப் பதவியில் முந்தைய மோடி அரசில் சுகாதார துறை மந்திரி பதவி வகித்த ஜே.பி.நட்டா அமர்த்தப்பட்டார். அவர் பா.ஜ.க. செயல் தலைவராக 2019, ஜூன் 17-ம் தேதி பொறுப்பு ஏற்றார்.

    பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா ஆகிய இருவராலும் விரும்பப்படுபவர், எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது ஜே.பி.நட்டாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்காக ஜே.பி.நட்டா சார்பில் மாநில கட்சி தலைவர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×