search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிகள் குழு
    X
    மத்திய மந்திரிகள் குழு

    மக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது

    மக்களை சந்தித்து பேசுவதற்காக, மத்திய மந்திரிகள் குழுவில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் ஜிதேந்தர் பிரசாத் சிங் உள்ளிட்டோர் விமானம் மூலம் ஜம்மு நகருக்கு சென்றனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாநில அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் காஷ்மீர் மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும், அவற்றால் காஷ்மீர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது பற்றி விளக்கி கூறவும், அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யவும் மத்திய மந்திரிகள் 38 பேர் கொண்ட குழுவை காஷ்மீருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை உள்துறை அமைச்சகம் செய்து உள்ளது.

    இந்த குழுவில் இடம் பெற்றுள்ள மந்திரிகளை, பிரதமர் மோடி அழைத்து பேசினார். அப்போது நகர்ப்புற மக்களை மட்டுமின்றி, கிராமப்புற மக்களையும் சந்தித்து பேசவேண்டும் என்றும், காஷ்மீர் மக்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்றும் மந்திரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

    இந்த குழுவில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் ஜிதேந்தர் பிரசாத் சிங், அர்ஜூன் மேக்வால், அஸ்வினி சவுபே ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் ஜம்மு நகருக்கு சென்றனர். ஆனால் அங்கு வானிலை மோசமாக இருந்ததால், அவர்கள் சென்ற விமானம் ஸ்ரீநகருக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் அவர்கள் ஸ்ரீநகர் போய்ச் சேர்ந்தனர். இதேபோல் மற்ற மந்திரிகளும் காஷ்மீர் செல்கிறார்கள்.

    மத்திய மந்திரிகள் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதோடு மக்களை சந்தித்து பேச விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×