search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீரடி சாய்பாபா,
    X
    ஷீரடி சாய்பாபா,

    ஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் நாளை வழக்கம்போல் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    சமீபத்தில் சாய்பாபா கோவிலுக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடம் ஆகும். ஷீரடி அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக 100 கோடி ருபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    முதல் மந்திரியின் இந்த அறிவிப்பு ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஷீரடியில் நாளை பந்த் நடைபெறும் என அப்பகுதியினர் அறிவித்தனர்.

    இதற்கிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி நாளை முதல் மூடப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றும், இந்த விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள கிராமவாசிகள் உடனான கூட்டமொன்று இன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஷீரடி சாய்பாபா கோவில் நாளை வழக்கம்போல் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, கோவில் நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷீரடி சாய்பாபா கோவில் நாளை மூடப்படும் என வெளியான தகவலில் உண்மையில்லை.  நாளை கோவில் திறந்திருக்கும்.

    கோவிலில் ஆரத்தி வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நாளை நடைபெறும். மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்படும். அதனால் பக்தர்கள் அனைவரும் வருகை தருவதற்கு  தடையில்லை என தெரிவித்துள்ளார்.

    ஆனாலும், ஷீரடியில் நாளை உணவு விடுதிகள், ஓட்டல்கள், தர்மசாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கும் எனவும், பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்படக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×