search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
    X
    நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

    நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகிறது

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதால் அவர்களை தூக்கில் போடும் தேதி தள்ளிப்போகியுள்ளது.
    புதுடெல்லி :

    டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள, சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான்.

    மீதமுள்ள முகே‌‌ஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

    இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7-ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகே‌‌ஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை பரிசீலித்து வரும் உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து உள்ளது.

    இந்த கருணை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என டெல்லி அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை துணைநிலை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அவரும் அதை ஏற்று முகே‌‌ஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நேற்று பரிந்துரைத்தார்.

    இதற்கிடையே வருகிற 22-ந்தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு டெல்லி கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டை எதிர்த்து ஐகோர்ட்டில் முகே‌‌ஷ் குமார் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘நிர்பயா வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடப்பதால், குற்றவாளிகளை 22-ந்தேதி தூக்கில் போடக்கூடாது’ என முகே‌‌ஷ் குமார் சிங்கின் வக்கீல் வாதிட்டார்.

    இதைப்போல குற்றவாளி ஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதால் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி வைக்க வேண்டும் என டெல்லி அரசு சார்பிலும் கோரிக்கை விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் கீழ் கோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தூக்கிலிடப்படும் நடவடிக்கையின் நிலவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    பின்னர் மரண வாரண்டை ரத்து செய்யக்கோரி முகே‌‌ஷ் குமார் சிங்கின் வக்கீல் விசாரணை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அங்கும் இந்த மனு நேற்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்த விசாரணை முடித்து நீதிபதி தனது உத்தரவில், ‘மரண வாரண்டு பிறப்பித்து நான் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யமாட்டேன். ஆனால் ஒரு கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படாது. அந்தவகையில் 22-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றமாட்டோம் என்ற அறிக்கை ஒன்றை சிறை அதிகாரிகள் எனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதன் மூலம் குற்றவாளிகள் 4 பேரும் 22-ந்தேதி தூக்கில் போடப்படமாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்களது தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போகிறது.

    கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நிர்பயா பெற்றோரின் வக்கீல் சீமா கு‌‌ஷ்வாகா கடும் அதிருப்தி தெரிவித்தார். குற்றவாளியின் கருணை மனு ஜனாதிபதியிடம் சென்று சேர்ந்திருக்கிறதா? என்பது உறுதியாக தெரியாத நிலையில், தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிப்போட முடியாது என்று தெரிவித்தார்.

    இது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகள் 4 பேரும் தண்டனை நிறைவேற்றப்படும் 3-ம் எண் சிறைக்கு நேற்று மாற்றப்பட்டனர். இதில் 3 பேர் இதுவரை 2-ம் எண் சிறையிலும், ஒருவர் 4-ம் எண் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×