search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீரங்கி வண்டியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அமர்ந்து ஹசிரா வளாகத்தை வலம் வந்த காட்சி.
    X
    பீரங்கி வண்டியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அமர்ந்து ஹசிரா வளாகத்தை வலம் வந்த காட்சி.

    ரூ.1¾ லட்சம் கோடி ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய இலக்கு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

    இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் ரூ.1¾ லட்சம் கோடி ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் அருகே ஹசிராவில் லார்சன் அண்ட் டூப்ரோ கவச அமைப்புகள் வளாகத்தில் நேற்று ‘கே-9 வஜ்ரா-டி ஹோவிட்சர்’ துப்பாக்கியுடனான பீரங்கி வண்டி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பச்சைக்கொடியசைத்து, அந்த பீரங்கி வண்டியை அறிமுகம் செய்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா தொடர்ந்து ஆயுதங்கள் இறக்குமதியை சார்ந்து இருக்க முடியாது. இன்னும் 5 ஆண்டுகளில், 2025-ம் ஆண்டுக்குள் 26 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் கோடி) ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.

    இது, இந்த துறையில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) முதலீட்டையும், 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையில் வேலை வாய்ப்பினையும் கொண்ட திட்டம் ஆகும்.

    கடந்த காலத்தில் பாதுகாப்பு துறையில் தனியார் முறையின் பங்களிப்பு மிகக்குறைவாக இருந்தது.

    இந்த நிலையை மாற்றுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த துறையில் இந்தியா தன்னை மட்டுமே நம்பியுள்ள நாடாக மாற்றிக்கொள்வது மட்டுமின்றி, ஏற்றுமதியும் செய்ய முடியும்.

    இந்த துறையில் முதலீடுகள் தொடர்பான பிரச்சினைகளை கவனிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் தனிப்பிரிவை உருவாக்கி உள்ளோம்.

    இங்கு லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், ஹோவிட்சர் துப்பாக்கியுடனான பீரங்கி வண்டியை தயாரிக்கிறது. இதே போன்று தனியார் துறையினரை ஆயுதம், தளவாட உற்பத்தியில் ஈடுபடுத்துவோம். இது புதிய பரிமாணமாக இருக்கும்.

    இந்தியாவை பாதுகாப்பு துறையில் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது. தொழில் அதிபர்களை ஊக்குவிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. தடைகளை அகற்றுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக துப்பாக்கி பொருத்தப்பட்ட பீரங்கி வண்டியில் ராஜ்நாத் சிங் அமர்ந்து, ஹசிரா வளாகம் முழுவதும் அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு சோதனை நடத்தும் பகுதியில் கே-9 வஜ்ரா-டி ஹோவிட்சர் பீரங்கி வண்டியை இயக்கி காண்பிக்கப்பட்டது.
    Next Story
    ×