search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம்ஆத்மி கட்சியில் 24 புதுமுகங்களுக்கு இடம்

    டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 24 புது முகங்களுக்கு ஆம்ஆத்மி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.

    டெல்லி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆம்ஆத்மி கடந்த சில தினங்களாக வேட்பாளர் தேர்வை தீவிரமாக ஆலோசித்து வந்தது. கடந்த தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி இந்த தடவையும் அதே போன்று வெற்றி பெறுவதற்காக வேட்பாளர் தேர்வில் தீவிர கவனம் செலுத்தியது.

    எம்.எல்.ஏ.க்களின் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகளை ஆய்வு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆம் ஆத்மி தலைவரும், முதல்- மந்திரியுமான கெஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆம்ஆத்மி வேட்பாளர் பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு வெற்றி பெற்ற 67 பேரில் 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 46 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் 24 புது முகங்களுக்கு ஆம்ஆத்மி வாய்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம்ஆத்மியில் சேர்ந்த 6 மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கெஜ்ரிவால் வாய்ப்பு கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் வினைய்குமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீண்டும் பட்பர்கஞ்ச் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். ஆம்ஆத்மி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் தங்களது தொகுதிகளிலேயே போட்டியிடுகிறார்கள்.

    மக்கள் நல பணிகளில் திறம்பட செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு கெஜ்ரிவால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஆத்மி வேட்பாளர் பட்டியலில் 8 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்களை ரிப் போர்ட் கார்டு அடிப்படையில் ஆம்ஆத்மி தேர்வு செய்து இருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது பாரதீய ஜனதா-காங்கிரஸ் கட்சி களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த கட்சிகள் வேட்பாளர்கள் விவரங்களை அறிவிக்க உள்ளன.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் இமாலய வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் 4-வது முறையாக முதல்வர் ஆகி சாதனை படைப்பார்.
    Next Story
    ×