search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து போட்டி- அமித் ஷா அறிவிப்பு

    பீகார் மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சந்திக்கும் என்று பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
    வைஷாலி:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், சட்டத்தின் அம்சங்களை மக்களிடம் விளக்கும் வகையிலும், சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

    அவ்வகையில் பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ்  உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படமாட்டாது.

    பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்மூலம் பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி நீடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணியை வீழ்த்த ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி உள்ளன. 
    Next Story
    ×