search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கேரள அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இச்சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று கம்யூனிஸ்டு ஆளும் கேரள அரசு அறிவித்தது.

    மேற்கு வங்காளத்திலும் மம்தா பானர்ஜி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டார்.

    இதற்கிடையே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

    இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டினார். இதில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேறியது.

    கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்-மந்திரி பினராயி விஜயன், இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதினார்.

    அதில், கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இச்சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார். இதுபோல அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகான் கண்டனம் தெரிவித்தார்.

    பினராயி விஜயன்


    மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தும் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த பினராயி விஜயன், மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற மாநில அரசுக்கு உரிமை உள்ளதாக கூறினார்.

    இந்த நிலையில் இன்று கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் 14, 21, 25 ஆகியவற்றிற்கு எதிரானது.

    சட்டத்தின் அடிப்படையையும், அதன் மேலான மதிப்பீட்டையும் குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்ளது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா ஆகும்.
    Next Story
    ×