search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்.
    X
    கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்.

    சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை- திமுக பங்கேற்கவில்லை

    தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேச நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    ஆரம்பத்தில் தீவிரமாக நடைபெற்ற போராட்டம் தற்போது மெல்ல மெல்ல வலுவிழந்து இருக்கிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்துவதற்கான உத்தரவுகள் கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டன.

    இதையடுத்து குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு போராட்டம் நடத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவசேனா ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன. கூட்டம் தொடங்கி வெகுநேரம் ஆகியும், காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக சார்பில் எந்த தலைவரும் பங்கேற்கவில்லை. முக்கிய எதிர்க்கட்சிகள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காததால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. தற்போது 2-வது முறையாக போராட ஆலோசிப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டு மக்களை வேண்டுமென்றே காங்கிரஸ் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பா.ஜ.க. கண்ட னம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×