search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுவை வணங்குதல்
    X
    பசுவை வணங்குதல்

    பசுவை தொட்டு கும்பிட்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் - மகாராஷ்டிர பெண் மந்திரி பேச்சு

    பசுவை தொட்டு கும்பிட்டால் நிச்சயமாக நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும் என்று மகாராஷ்டிர பெண் மந்திரி பேசியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சிவசேனா தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோமதி தாக்குர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக உள்ளார்.

    கடந்த சில தினங்களாக இவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கடும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் இவர் மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிக்காரர்கள் நிறைய பணம் தருவார்கள். வாங்கிக் கொள்ளுங்கள். தப்பு இல்லை. ஆனால் உங்களது வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு தாருங்கள்.

    நாங்கள் இப்போதுதான் மந்திரி பதவியை ஏற்று இருக்கிறோம். நாங்கள் இன்னும் பணம் சம்பாதிப்பதைத் தொடங்கவில்லை. பணம் சம்பாதித்ததும் உங்களுக்கும் தருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த பேச்சுக்கு எல்லா கட்சிகளும் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன.

    தற்போது அவர் பசு மாடு பற்றி பேசி இருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அமராவதி மாவட்டத்தில் நல திட்ட விழாவில் பங்கேற்று பேசியதாவது:-

    இந்த ஊரில் பசு மாட்டை தெய்வமாக கருதி வணங்குகிறீர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அது மதமாக மாறுகிறது. இதில் நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையோடு வழிபட்டால் நிச்சயம் நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    பசு மாட்டை எப்போதும் தொட்டு கும்பிட வேண்டும். அப்படி தொட்டு கும்பிட்டால் நிச்சயமாக நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும். இந்த அதிசயம் நடப்பது நமது கலாச்சாரத்தில் தெள்ள தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பசு புனிதமான உயிரினம். அது நமக்கு அன்பை போதிக்கிறது. இதை நான் சொல்வதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு காங்கிரஸ் பெண் மந்திரி யசோமதி பேசினார்.

    அவரது பேச்சு மூட நம்பிக்கையை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×