search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
    X
    ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

    பாராளுமன்றம் விரும்பினால் ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்’ - ராணுவ தளபதி உறுதி

    காஷ்மீர் முழுவதும் நமக்கானதாக இருக்க வேண்டும் என பாராளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒட்டுமொத்த காஷ்மீரும் நமக்கு சொந்தமானது என பாராளுமன்றத்தில் நீண்ட காலத்துக்கு முன் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அப்படி காஷ்மீர் முழுவதும் நமக்கானதாக இருக்க வேண்டும் என பாராளுமன்றம் விரும்பினால், அது தொடர்பாக எங்களுக்கு சொல்லப்பட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்’ என்று தெரிவித்தார்.

    இந்திய ராணுவம் ஒரு தொழில்முறை ராணுவம் எனவும், இது மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது எனவும் கூறிய நரவானே, தங்கள் நடவடிக்கை அனைத்தும் நாட்டு மக்களுக்காகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்திய அரசியல் சாசனம் மற்றும் அரசியல் சாசனத்தால் பேணப்படும் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு ராணுவம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

    காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு நீக்கிய மத்திய அரசு, இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×