search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

    மத்திய பட்ஜெட் - பொருளாதார நிலை குறித்து நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

    மத்திய பட்ஜெட், பொருளாதார சரிவு போன்றவை குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    இந்திய பொருளாதாரம் 11 ஆண்டுகளாக இல்லாத வகையில் 5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

    எனவே பொருளாதார வளர்ச்சியை மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள், மத்திய பட்ஜெட் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்கள், வெற்றிகரமான இளம் தொழில் முனைவோர், நிதித்துறை வல்லுனர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 40 நிபுணர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி அவர்களுடன் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிபுணர்கள் கடன் நீட்டிப்பு, ஏற்றுமதி வளர்ச்சி, பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததாக தெரிகிறது.

    இந்த ஆலோசனைகளின்படி கட்டமைப்பை சீரமைக்க தேவையான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு உறுதி அளித்தார்.

    இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் டுவிட்டரில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்கள், தொழில் முனைவோர் ஆகியோருடன் கலந்துரையாடினார். பொருளாதார வளர்ச்சி, புதிய தொழில் தொடங்குதல், கண்டுபிடிப்புகள் போன்ற பல பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது’’ என்று கூறியுள்ளார்.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்‌ஷா, நிதின்கட்காரி, பியூ‌‌ஷ் கோயல், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை. அவர் பட்ஜெட் குறித்து பா.ஜனதா நிர்வாகிகள், செய்தி தொடர்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோருடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர்கள் பூபேந்திர யாதவ், அருண்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அருண்சிங் கூறும்போது, ‘‘நிதி மந்திரி கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிப்ரவரி 1-ந்தேதி மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.

    பொருளாதார பிரச்சினைகளுக்கான செய்தி தொடர்பாளர் அகர்வால் கூறும்போது, ‘‘குறிப்பிட்ட துறையுடன் ஒரு கூட்டம் என இதுபோல 11 கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுவரை 7 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது’’ என்றார்.
    Next Story
    ×