search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வெளியேற்றம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அமித்ஷா நடத்திய பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் பேரணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் வீடு வீடாக சென்று சமீபத்தில் ஆதரவு திரட்டினார்.

    லாஜ்பத் நகர் பகுதியில் அவருக்கு எதிராக 2 பெண்கள் கோ‌ஷமிட்டனர். அவர்கள் தங்களது வீட்டு மாடியில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைத்து இருந்தனர். இதன் மூலம் அவர்கள் அமித்ஷாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    ஆதரவாக பேரணியில் பங்கேற்றவர்கள் இதை எதிர்த்து பேனரை கிழித்து எடுத்து சென்றனர்.

    அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாடகை வீட்டில் இருந்த சூர்யா ராஜப்பன் மற்றும் அந்த வீட்டில் இருந்த மற்றொரு பெண் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வீட்டின் உரிமையாளர் அவர்களை அந்த பிளாட்டில் இருந்து வெளியேற்றினார்.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்ணான வக்கீல் சூர்யா கூறியதாவது:-

    அமித்ஷாவின் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியை நாங்கள் அறிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமையை பயன்படுத்தினோம். சக பெண்ணுடன் சேர்ந்து பால்கனியில் இருந்து ஒரு பேனரை காண்பித்தோம். அந்த பேனரில் இழிவான சொற்கள் எதுவும் இல்லை.

    எங்களுக்கு எதிராக 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு விட்டனர். பலமணி நேரம் சிக்கி தவித்த எங்களை போலீசார் பாதுகாப்போடு வெளியேற்றினார்கள்.

    அரசியல் காரணங்களுக்காக எங்களை அந்த வீட்டின் உரிமையாளர் வெளியேற்றி உள்ளார். இது தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×