search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி இந்து மல்கோத்ரா- நாரிமன் இடம் பெறவில்லை

    சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகளின் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறவில்லை.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் காலம் காலமாக பலவித ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள இளம்பெண்கள் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று தீர்ப்பு அளித்தது.

    இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சபரிமலையே போர்க்களம் போல மாறியது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, மீண்டும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தது.

    இந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும், வருகிற 13-ந்தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகளின் பெயர் விவரங்களையும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    அதன்படி, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூ‌ஷண், நாகேஷ்வரராவ், சந்தனாகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய், சூரியகாந்த் ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க உள்ளனர்.

    இதற்கு முன்பு சபரிமலை வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இடம் பெற்ற பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறவில்லை.

    நீதிபதி இந்து மல்கோத்ரா சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று தீர்ப்பு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×