search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி
    X
    இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி

    அமெரிக்கா - ஈரான் மோதல்: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி- ரூபாய் மதிப்பு சரிவு

    அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது.
    புதுடெல்லி:

    ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது ஆள்இல்லாத சிறிய விமானம் மூலம் ஏவுகணைகளை வீசியதில் அவர் உயிரிழந்தார்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான், ஈராக் மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை பழிக்கு பழி வாங்க தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் கூறியுள்ளது. ஈராக் நாடு தனது மண்ணில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து வளைகுடா பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது. இது அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த போர் பதட்டம் எதிரொலியாக உலக நாடுகளில் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்து 40,676 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்கு சந்தையில் 233 புள்ளிகள் குறைந்தது.

    சென்செக்சை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது. வங்கிகளின் பங்குகளும் சரிவை சந்தித்தன. இது பங்கு சந்தையில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை ரூ.157 லட்சம் கோடியாக இருந்தது. நேற்று அது ரூ.154 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று ஒரே நாளில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இழப்பாகும் என்று முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அமெரிக்கா-ஈரானின் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருகிறது. நேற்று கச்சா எண்ணை விலை பேரலுக்கு 71 டாலராக உயர்ந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.96ஆக இருந்தது.

    தங்கம்

    இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை 1.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. நேற்று 8 கிராம் தங்கம் ரூ.31 ஆயிரத்தையும் 10 கிராம் தங்கம் ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இன்று தங்கம் விலை சற்று குறைந்தது.

    சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, தங்கம் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்றவை ஏற்பட்டுள்ளன. இது ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கக்கூடும் என்ற அபாயம் உருவாகி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். ஈரான், ஈராக் நாடுகளுடன் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் டிரம்பிடம் கேட்டுக்கொண்டார்.

    இந்தியா தனது கச்சா எண்ணை தேவையில் 83 சதவீதத்தை வளைகுடா நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவின் திடீர் நடவடிக்கைகளால் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இந்திய பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கத் தொடங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்காவை சமரசம் செய்யும் முயற்சிகளை பிரதமர் மோடி தீவிரப்படுத்தியுள்ளார். 
    Next Story
    ×