search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

    குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குழப்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
    ஜெய்ப்பூர் :

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்த சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் வீடு, வீடாக சென்று சட்டம் குறித்து மக்களிடம் விளக்கி வருகின்றனர்.

    இந்த திட்டத்தின்கீழ் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், நிதி மந்திரியுமான நிர்மலா சீதாராமன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று மக்களை சந்தித்தார். அங்குள்ள காக்சி மொகல்லா, குதாபக்‌‌ஷ் சவுக், லட்சுமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களிடம் அவர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது ஒரு முஸ்லிம் குடும்பத்தினரிடம் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டமானது எந்த ஒருவரின் குடியுரிமையையும் ரத்து செய்வதற்கானது அல்ல. எதிர்க்கட்சிகளிடம் வேறு பிரச்சினைகள் இல்லாததால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் தவறான கருத்துகளை பரப்புகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் தொடர்புபடுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்’ என்று தெரிவித்தார்.

    பாஜக

    பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குழப்பத்தை உண்டாக்குகின்றன. மக்களை அவர்கள் திசை திருப்புகிறார்கள். வீடியோ பதிவு மூலம் அறிக்கை விடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வன்முறை சம்பவங்களை கண்டிக்கவில்லை. வன்முறையாளர்கள் பக்கம்தான் காங்கிரஸ் நிற்கிறது.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினர் அங்கு துயரங்களை அனுபவித்ததால் கடந்த 60 ஆண்டுகளில் அடைக்கலம் தேடி இந்தியா வந்துள்ளனர். அவ்வாறு கடந்த 60 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து வந்த 2 ஆயிரம் அகதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 900 பேர், வங்காளதேசத்தில் இருந்து வந்த 200 பேரும் இந்திய குடியுரிமை பெற்று இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

    இதில் எந்த பாகுபாடும் இல்லை. இன்றுகூட குடியுரிமை சட்டத்தின் மூலம் அவர்களால் குடியுரிமை பெற முடியும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    Next Story
    ×