search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
    X
    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

    குடியுரிமை திருத்த சட்டம் : உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சிறையில் தள்ளியதற்கு உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையால் 19 பேர் பலியானார்கள். போராட்டம் நடத்திய 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆயிரத்து 558 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் யோகி ஆதித்யநாத் அரசு சிறையில் தள்ளுகிறது. பிஜ்னோர், சம்பல், மீரட், முசாபர்நகர், பிரோசாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்திய அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.

    இதற்காக பொதுமக்களிடம் உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பாவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். போராட்டங்களில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு அளிக்க வேண்டும்.

    உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலை பகுஜன் சமாஜ் கட்சி குழு 6-ந் தேதி (இன்று) சந்திக்கிறது. போராட்ட வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மனு கொடுக்க உள்ளது.

    இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
    Next Story
    ×