search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏக்நாத் கட்சே
    X
    ஏக்நாத் கட்சே

    எனக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டதற்கு பட்னாவிஸ் தான் காரணம்: ஏக்நாத் கட்சே

    எனக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டதற்கு தேவேந்திர பட்னாவிஸ் தான் காரணம் என ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
    மும்பை :

    வட மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் கட்சியின் மாநில தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது தொடர்பாக அவர் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சாடி வருகிறார்.

    இந்த நிலையில், மராத்தி செய்தி சேனல் ஒன்றுக்கு ஏக்நாத் கட்சே பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தேவேந்திர பட்னாவிசும், முன்னாள் மந்திரி கிரிஷ் மகாஜன் ஆகிய இருவரும் தான் காரணம். அவர்கள் தான் எனக்கு முக்தாநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட கமிட்டி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

    அவர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பாரதீய ஜனதாவின் மத்திய தலைமை எனக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்க விரும்பியது.

    ஆனால் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் மட்டும் தான் மாநிலம் முழுவதும் பிரசாரத்திற்கு சென்றார்.

    மாநில பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்கள், மத்திய மந்திரி நிதின் கட்காரி போன்றவர்கள் பிரசாரத்துக்கு அழைக்கப்படவில்லை. மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூட மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்வதற்கு பதிலாக தனது தொகுதியில் மட்டும் தான் பிரசாரம் செய்தார். இதனால் தான் பாரதீய ஜனதா நிறைய இடங்களில் தோல்வியை தழுவியது.

    இதுவரை நிகழ்ந்த அனைத்தையும் பார்க்கும் போது எனக்கு எதிரான சிலர், எனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்வது போல் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×