search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ தலைவர் சிவன்
    X
    இஸ்ரோ தலைவர் சிவன்

    குலசேகரபட்டினத்தில் புதிதாக ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அமைந்துள்ளது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டில் ‘இஸ்ரோ’ மேற்கொள்ளும் விண்வெளி திட்டங்கள் குறித்து ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ‘சந்திரயான்-3’ திட்டமானது ‘சந்திரயான்-2’ திட்டத்தின் அடிப்படையை கொண்டது. இந்த திட்டத்தில் லேண்டர், ரோவர், உந்துவிசை தொகுப்பு (பிரோபல்சன் மாடுல்) ஆகியவை உள்ளன. திட்ட பணிக்கான குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ‘சந்திரயான்-3’ திட்டத்தில் லேண்டர், ரோவர் ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.250 கோடியும், ஏவுவதற்கு ரூ.365 கோடி என்று மொத்தம் ரூ.615 கோடி செலவு செய்யப்பட உள்ளது. ‘சந்திரயான்-2’ திட்ட செலவை ஒப்பிடும்போது, இது குறைவு.

    ‘சந்திரயான்-3’ திட்டத்தை இந்த ஆண்டில் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இருப்பினும் திட்ட பணிகள் முழுவதுமாக முடிந்து விண்ணில் ஏவ அடுத்த ஆண்டு (2021) ஆகிவிடலாம். ‘சந்திரயான்-2’ திட்டம் மூலம் நல்ல அனுபவம் பெற்றுள்ளோம்.

    ‘சந்திரயான்-2’ திட்டத்தில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்காமல் வேகமாக சென்று விழுந்தது. இதனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், ‘சந்திரயான்-2’ ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவை சுற்றி வருகிறது. இது இன்னும் 7 ஆண்டுகள் செயல்படும். இதன்மூலம் விஞ்ஞான தரவுகள் கிடைக்கும். ‘சந்திரயான்-2’ ஆர்பிட்டரையும் ‘சந்திரயான்-3’ திட்டத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

    ராக்கெட் ஏவுதளம்

    இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்ட பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ‘ககன்யான்’ விண்வெளி ஓடம் வடிவமைப்புக்கான பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டது. சில சோதனைகள் பாக்கியுள்ளது. இந்த சோதனைகளை நடப்பு ஆண்டில் செய்து முடிப்போம். ‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    விமானப்படையை சேர்ந்த இவர்கள் ரஷியாவில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மாதம் 3-வது வாரத்தில் அங்கு அவர்களுக்கு பயிற்சி தொடங்க இருக்கிறது. வீரர்களுக்கான இந்த பயிற்சி முக்கியமானது. ‘ககன்யான்’ திட்டம் வருகிற 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும். இந்த ஆண்டில் 25-க்கும் அதிகமான விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ‘சந்திரயான்-3’, ‘ககன்யான்’ திட்ட பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பிற விண்வெளி திட்ட பணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. இதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்திலும் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

    இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 2,300 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. முதலில் எஸ்.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் இங்கிருந்து ஏவப்படும். அதன்பின்னர் இந்த ஏவுதளம் விரிவாக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×