search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    பிரியங்கா, பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்- மத்திய ரிசர்வ் போலீஸ் படை விளக்கம்

    பிரியங்கா, பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என்றும், அதிகாரிகள் தரப்பில் தவறு இல்லை என்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவர், ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பில் இருக்கிறார். அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு அளித்து வருகிறது.

    இந்த பயணத்தின்போது, பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக சி.ஆர்.பி.எப்புக்கு பிரியங்கா அலுவலகம் கடிதம் எழுதியது. அதற்கு சி.ஆர்.பி.எப். ஐ.ஜி. (உளவு மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு) பி.கே.சிங் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் பிரியங்கா பங்கேற்கும் ஒரே நிகழ்ச்சியாக, மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு செல்வது பற்றி மட்டுமே எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அங்கு பாதுகாப்பு ஒத்திகை நடத்தினோம். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம்.

    பிரியங்காவின் முழுமையான நிகழ்ச்சி விவரங்களை அவருடைய தனி உதவியாளர் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. பிரியங்கா, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தாராபூரி இல்லத்துக்கு செல்லும் முடிவை திடீரென எடுத்தார். முன்கூட்டியே சொல்லாமல், திட்டமிடப்படாத நிகழ்ச்சியை மேற்கொண்டதால், பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ள முடியவில்லை.

    அதிகாரிகள் தரப்பில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. பிரியங்காதான், இந்த பயணத்தின்போது, 3 தடவை பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டார். குண்டு துளைக்கக்கூடிய சாதாரண வாகனத்தில் தனி பாதுகாப்பு அதிகாரி இல்லாமல் அவர் பயணம் செய்தார். ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றார். இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகளை பிரியங்காவுக்கு தெரிவித்து, இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×