search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் உறைந்து காணப்படும் தால் ஏரியை படத்தில் காணலாம்.
    X
    தண்ணீர் உறைந்து காணப்படும் தால் ஏரியை படத்தில் காணலாம்.

    கடும் குளிரால் கா‌‌ஷ்மீரில் தால் ஏரி உறைந்தது

    கடும் குளிர் காரணமாக கா‌‌ஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்தது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, இமாசலபிரதேசம், கா‌‌ஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த ஆண்டு குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது. இரவில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் குளிர் கடுமையாக உள்ளது. பொழுது விடிந்த பின்னரும் நீண்ட நேரம் பனி மூட்டமாகவே காணப்படுகிறது. குளிரை சமாளிக்க தெருக்களில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்கிறார்கள். கடும் குளிர் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

    பனிமூட்டம் காரணமாக டெல்லி மற்றும் பிற வட மாநிலங்களில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. விமான போக்குவரத்தும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    கடும் குளிரிலும் தாஜ்மகாலை காண குவிந்த சுற்றுலா பயணிகள்.

    டெல்லியில் இந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவாக நேற்று முன்தினம் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. நேற்று அங்குள்ள சப்தர்ஜங் பகுதியில் 3.4 டிகிரி செல்சியசும், பாலம் விமானநிலையம் பகுதியில் 3.2 டிகிரி செல்சியசும், லோதி சாலை பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவானது. டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர் காற்று வீசியது. பனிமூட்டம் காரணமாக பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்று குளிர் அதிகமாக இருந்தபோதிலும், தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் நேற்று பனிக்காற்று வீசியது. சண்டிகாரைச் சேர்ந்த முதியவரான ராஜே‌‌ஷ் குமார் கூறுகையில், இதுபோன்ற கடுமையான குளிரை இதுவரை தான் பார்த்தது இல்லை என்றார்.

    குளிர் காரணமாக அரியானாவில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வழக்கமான குளிர்கால விடுமுறை நாட்கள் ஆகும்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று மிகவும் குறைவாக 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி அங்கு குறைந்தபட்சமாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பனிமூட்டம் காரணமாக ஜெய்ப்பூர், பிலானி, கோட்டா, பண்டி, பிகானீர், ஜெய்சல்மார், ஸ்ரீகங்காநகர் மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இமாசலபிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    நாட்டின் வட கோடியில் அமைந்துள்ள குளிர் பிரதேசமான கா‌‌ஷ்மீர் மாநிலத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 6.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் அங்குள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் உறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. டிராஸ் நகரில் வெப்பநிலை மைனஸ் 28.7 டிகிரியாக இருந்தது.

    இதேபோல் கோகர்நாக், பாகல்காம் உள்ளிட்ட பகுதிகளிலும் குளிர் வாட்டுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×