search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர்கள் மற்றும் மம்தா பானர்ஜி
    X
    பாஜக தலைவர்கள் மற்றும் மம்தா பானர்ஜி

    குடியுரிமையை நிரூபிப்பதற்காக பாஜகவின் பதக்கத்தை அணிந்துக்கொள்ள வேண்டுமா? - மம்தா ஆவேசம்

    இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்காக நாம் என்ன பாஜக பதக்கத்தை அணிந்துக்கொள்ள வேண்டும் என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
    கொல்கத்தா:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி நடைபெற்றது. 

    இந்த பேரணியில் மம்தா பேசியதாவது:-

    தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டமோ அல்லது கலந்துரையாடலோ இல்லை என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்துறை மந்திரி அமித் ஷா  கூறுகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    இவர்கள் இருவரின் பேச்சுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இதில் யார் உண்மையை பேசுகிறார்கள்? என நமக்கு தெரியவில்லை. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். பாஜகவை விட மிகப்பெரிய மோசடி பேர்வழி வேறுயாரும் இல்லை.   

    பொதுத்தளத்தில் நாங்கள் பேசுவதை கேளுங்கள். அதேபோல் பொதுத்தளத்தில் பாஜக கட்சி பேசுவதையும் கேளுங்கள். இரண்டுக்கும் இடையேயான வித்தியாத்தை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். பாஜக நாட்டை பிளவுப்படுத்த முயற்சி மேற்கொள்கின்றது. ஆனால், அவ்வாறு பிளவுப்படுத்த நாட்டு மக்கள் விடமாட்டார்கள். 

    நாட்டு மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்தச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நான் உயிரோடு இருக்கும்வரை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தவிடமாட்டேன்.

    பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கு வங்காளத்தில் நாங்கள் தற்காலிக சிறைகளை ஒருபோதும் அமைக்கமாட்டோம்.  

    நாட்டுமக்கள் ஒன்றும் பாஜகவுக்கும் அதன் தலைவர்களுக்கும் பணியாளர்கள் கிடையாது. மக்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் அதிரடியான பதிலடி கொடுப்பார்கள். நீங்கள்(பாஜக) ஏற்கனவே மகாராஷ்டிராவிலும், ஜார்க்கண்டிலும் மக்களிடமிருந்து உரிய பதிலடியை பெற்றுவிட்டீர்கள்.

    மேற்கு வங்காளத்தில் ஒருவர் (கவர்னர் ஜகதீப் தன்கர்) இருக்கிறார். அவர் இந்த மாநிலத்தில் நடக்கும் நல்லது எதையும் பார்ப்பதே இல்லை.

    ஜனநாயகத்தின் சித்தாந்தங்கள் விட்டுக்கொடுக்கப்படுவதாக அவர் தினமும் கூறி வருகிறார். அவரிடம் நான் கேட்பது என்னவென்றால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களை லக்னோ விமான நிலையத்தில் நிறுத்தி கைது செய்வதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?

    கொல்கத்தாவில் பாஜக திங்கள்கிழமையன்று  பேரணி நடத்தியது. அந்த பேரணியை நாங்கள் தடுக்கவில்லை. நாங்கள் விரும்பி இருந்தால், எங்களால் முடியும். எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. 

    நாங்கள் இங்கு பிறந்ததே எங்களுக்கு பெரிய அடையாளம். எங்களது குடியுரிமையை முடிவு செய்ய பாஜகவுக்கு உரிமை இல்லை. குடியுரிமையை நிரூபிப்பதற்காக நாம் பாஜக பதக்கத்தை அணிந்துக்கொள்ள வேண்டுமா?

    1980-களில் உருவான ஒரு கட்சி (பாஜக) 1950, 60, 70-ம் ஆண்டுவாக்கில் பிறந்தவர்களின் ஆவணங்களை கேட்பது வேதனையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.  

    இவ்வாறு அவர் பேசினார்.  
    Next Story
    ×