search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி பேரணி
    X
    மம்தா பானர்ஜி பேரணி

    தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கவர்னர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மீண்டும் பேரணி நடத்தினார்.
    கொல்கத்தா:

    குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை பா.ஜனதா கட்சி நிறைவேற்றியது.

    சட்டம் நிறைவேறியதும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அனைத்து மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    கேரளா, மேற்கு வங்காளம், ராகஸ்தான், பீகார் உள்பட 11 மாநில முதல் மந்திரிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில மந்திரிகள், காங்கிரஸ் - கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் இருகட்சிகளை சேர்ந்த தொண்டரகள் பெருமளவில் கலந்து கொண்டார்.

    இன்றைய பேரணியில் மம்தா பானர்ஜி

    இந்நிலையில், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் முதல் மந்திரி மம்தா தலைமையில் பேரணிகள் நடைபெற்றன. ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல் மந்திரி அசோக் கேலாட் தலைமையில் பேரணி நடைபெற்றது.

    இதற்கிடையில், மேற்கு வங்காளத்தில் இன்று பட்டமளிப்பு விழாவிற்கு வந்த கவர்னருக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மாநில கவர்னர் ஜெகதீப் தங்கார் நேற்று பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அப்போது அங்கு குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள், கவர்னர் காரை முற்றுகையிட்டனர்.

    கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன், கவர்னரை திரும்பி போகும்படியும் கூறினர்.

    இதனால் கவர்னர் நீண்ட நேரம் காருக்குள்ளேயே தவித்தார். பின்னர், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய  பாதுகாவலர்கள் கவர்னரை காரில் இருந்து பாதுகாப்பாக பல்கலைக்கழகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெகதீப் தங்கார், 'பட்டங்களை பெறுவதற்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், சிலர் என்னை உள்ளே செல்ல விடாமல் தடுக்கின்றனர்.
    சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதையும் கல்வியை இந்த மாநில அரசு சிறைப்படுத்தி விட்டதையும் இது காட்டுகிறது’ என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று மீண்டும் பேரணி நடத்தினார்.

    இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்து சென்றனர்.
    Next Story
    ×