search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா தாகூர்
    X
    பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா தாகூர்

    விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பிரக்யா தாகூர் எம்.பி. - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம்

    பா.ஜனதாவின் பெண் எம்.பி. பிரக்யா தாகூர் விமானத்தில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து போபாலுக்கு செல்ல தயாரானது. இந்த விமானத்தின் முதல் வரிசையில் உள்ள இருக்கை ஒன்றை பா.ஜனதாவின் பெண் எம்.பி. பிரக்யா தாகூர் முன்பதிவு செய்திருந்தார்.

    ஆனால் அவர் சக்கர நாற்காலியில் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு அந்த இருக்கை ஒதுக்க முடியாது எனவும், அடுத்த வரிசையில் உள்ள ஒரு இருக்கையில் அமருமாறும் விமான ஊழியர்கள் பிரக்யா தாகூரிடம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டார்.

    பா.ஜனதா எம்.பி.யின் நடவடிக்கையால் விமானம் புறப்படுவது தாமதமானது. இதனால் எரிச்சலடைந்த சக பயணிகள், அவரை இறக்கி விடுமாறு விமான ஊழியர்களிடம் அறிவுறுத்தினர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில் விமான ஊழியர்கள் ஒதுக்கிய இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தார். இந்த களேபரத்தால் விமானம் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக கிளம்பியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பிரக்யா தாகூர் எம்.பி. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சக்கர நாற்காலி பற்றி எதுவும் குறிப்பிடாததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறியுள்ளது.
    Next Story
    ×