search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது - பிரதமர் மோடி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் அனுமதி பெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முறைப்படுத்தி பட்டா வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா பதிவேடுகளை அளித்து உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குடியுரிமை சட்டத்தினால் அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என்ற வதந்திகள் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் நண்பர்களான சில நகர்ப்புற நக்சல்களால் பரப்பப்படுகின்றன.

    நீங்கள் கற்ற கல்விக்கு மதிப்பளித்து குடியுரிமை சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை படித்துப் பாருங்கள்.

    டெல்லியில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பு பகுதிகளை இப்போது முறைப்படுத்தியபோது உங்கள் மதம் என்ன என்று கேட்டோமா? நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று கேட்டோமா?
    1970, 1980-களில் இந்த் நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று கேட்டோமா?

    இதனால் இங்கு வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே பலனடைந்துள்ளனர்.

    என்னை தேர்தலில் சந்திக்க துணிசில்லாதவர்கள் மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு நாங்கள் குடியுரிமை சட்டத்தை திருத்தியாத பொய்யான வதந்திகளையும் போலி வீடியோக்களயும் பரவவிட்டு  நாட்டை பிளவுப்படுத்த பார்க்கின்றனர்.

    மோடியின் பேச்சை கேட்க திரண்ட கூட்டம்

    பெரிய பதவிகளில் இருப்பவர்கள்கூட போலி வீடியோக்கள் மூலம் வன்முறையை தூண்டி விடுகின்றனர். நாட்டின் விடுதலைக்காக 33 ஆயிரம் போலீசார் வீரமரணம் அடைந்ததுப்போக தற்போது கலவரக்காரர்களிடம் போலீசார் அடிவாங்கி, காயப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்னர் ஓட்டுவங்கி அரசியலுக்காக அவர்கள் கைவிட்டதை இப்போது எங்கள் அரசு செய்து வருகிறது.

    அகதிகளாக இந்தியாவுக்கு வந்த மக்களுக்கும் ஊடுருவல் மூலம் வந்தேறியவர்களுக்கும் இடையே ஒரு மிகவும் சாதாரணமான வேறுபாடு உண்டு. வந்தேறிகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். அகதிகள் தங்களது அடையாளத்தை மறைக்க மாட்டார்கள்.

    உலகளாவிய வகையில் முஸ்லிம் நாடுகளில் எனக்கு கிடைக்கும் ஆதரவைக்கண்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

    உலகில் வாழும் முஸ்லிம்கள் இவருக்கு இவ்வளவு ஆதரவு அளிக்கும்போது இந்திய முஸ்லிம்களை நாம் இன்னும் எத்தனை காலம் பயமுறுத்தி அரசியல் செய்ய முடியும்? என்ற கவலையில் அவர்கள் உள்ளனர். அதனால் குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற பொய்யை பரப்பி வருகின்றனர்.

    குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது. எனவே, வன்முறையான போராட்டப் பாதையை மக்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×