search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லக்னோவில் இன்று நடைபெற்ற போராட்டம்
    X
    லக்னோவில் இன்று நடைபெற்ற போராட்டம்

    குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 3 பேர் பலி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசம், கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
    லக்னோ:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து மத வேறுபாடுகளினால் வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. 

    இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வன்முறையில் களமாக மாறிவருகிறது.

    இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும், போராட்டக்காரர்கள் பஸ்கள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீ வைத்து கொளுத்தியும் போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலின் போது 16 போலீசார் உள்பட 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். 

    கண்ணீர் புகை குண்டு வீசப்படும் காட்சி (கோப்பு படம்)

    இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 25 வயது நிரம்பிய நபர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோல், கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 

    அப்போது மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் படுகாயமடைந்த 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

    இதனால், லக்னோ மற்றும் மங்களூரில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×