search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நான்காவதும் பெண்ணாக பிறந்ததால் 3 மகள்களை கிணற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை

    குஜராத் மாநிலத்தில் நான்காவதும் பெண்ணாக பிறந்ததால் 3 மகள்களை கிணற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள கம்பாலியா கிராமத்தை சேர்ந்தவர் ரசிக் சோலாங்கி (36).

    இவருக்கு ரியா (8), அஞ்சலி (7), ஜல்பா (3) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி நான்காவதாக கர்ப்பமானார். 4-வது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என சோலாங்கி சொல்லிக்கொண்டே இருந்தார்.

    ஆனால் கடந்த வாரம் அவரது மனைவிக்கு பிரசவம் நடந்தது. அப்போது நான்காவதும் பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்த சோலாங்கி ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்தார்.

    கடந்த திங்கட்கிழமை அவரது மனைவி, பிறந்த குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சோலாங்கி தனது 3 மகள்களையும் கவனித்து வந்தார்.

    நேற்று பிற்பகலில் தனது 3 மகள்களையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அப்பகுதில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்குள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் 3 மகள்களையும் அடுத்தடுத்து தூக்கி வீசி கொலை செய்தார். பின்னர் தோட்டத்துக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி ஒருவர் சோலாங்கி தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது சகோதரரிடம் கூறினார். அவர் ஓடிச்சென்று மரத்தில் இருந்து உடலை இறக்கினார். அதற்குள் அவர் இறந்துவிட்டார். சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது.

    குழந்தைகளை தேடிப்பார்த்த போது அவர்கள் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் சோலாங்கி தனது மகள்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×