search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    நிர்பயா வழக்கு- குற்றவாளி அக்சய் சிங்கின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளியான அக்சய் சிங்கின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

    மீதமுள்ள 4 பேரில் மூன்று பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் நான்காவது குற்றவாளியான அக்சய் குமார் சிங், சமீபத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். 

    இந்த மனு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார். மேலும், இவ்வழக்கு வேறு அமர்வில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. 

    அப்போது மனுதாரர் அக்சய் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், மரண தண்டனை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், மரண தண்டனை இந்தியாவில் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஊடக அழுத்தம் மற்றும் மக்களின் அழுத்தம் காரணமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனையைப் பயன்படுத்துவது, இதுபோன்ற குற்றங்களைத் தடுக்காது என்றும் அவர் கூறினார்.

    மனித குலத்திற்கு எதிராக இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கருணை காட்டக்கூடாது என சொலிசிட்டர் ஜெனரல்  துஷார் மேத்தா வாதிட்டார்.

    துஷார் மேத்தா

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கொடுத்த  தீர்ப்பை சீராய்வு செய்ய அவசியம் உள்ளதாக தோன்றவிலை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்மூலம் அக்சய் குமார் சிங்கின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×