search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு

    மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடு நிலுவை தொகையான ரூ.35 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இழப்பை மத்திய அரசு வழங்க வேண்டும். இது நீண்டகாலமாக வழங்கப்படாததால் பல்வேறு மாநில அரசுகளின் பிரதிநிதிகள், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகள் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்கள்.

    மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வழங்காததால் பல வளர்ச்சிப்பணிகள் தாமதமாவதாகவும், எனவே விரைவில் இந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நாளை (புதன்கிழமை) ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவை தொகை ரூ.35 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது.

    இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் டுவிட்டரில், “மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.35,298 கோடியை இன்று (நேற்று) மத்திய அரசு வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து நிதி மற்றும் முதலீடு சந்தை பிரதிநிதிகளுடன் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் முக்கியமாக வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள் அதிகரித்திருப்பது, இணைப்பு நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மாற்றம், பத்திரங்கள் விற்பனையை அதிகரிப்பது, கடன் உத்தரவாத திட்டம், ரியல் எஸ்டேட் துறையில் மாற்று முதலீடு, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீதான அழுத்தங்களை நீக்குவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    நிதி மந்திரியுடன், இணை மந்திரி அனுராக் தாகூர், நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், பொருளாதாரத்துறை செயலாளர் அதானு சக்கரவர்த்தி, வருவாய்த்துறை செயலாளர் அஜய்பூஷண் பாண்டே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிதித்துறை, முதலீடு சந்தை பிரதிநிதிகள் வழங்கிய பல்வேறு பரிந்துரைகளை ஏற்று இந்திய சந்தைக்கு ஊக்கம் தருவது குறித்து ஆராயப்பட்டது. பருவ காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி.யை குறைப்பது, மின்னணு முறையில் கடன் வழங்குவதை ஊக்குவிப்பது போன்ற பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

    தனியார் வங்கிகளும் பெண்கள் மற்றும் எஸ்.சி.-எஸ்.டி. சமுதாயத்தினருக்கு தொழில் முதலீட்டு கடன்கள் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பின்னர் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது பற்றி எனக்கு தெரியாது. பல்கலைக்கழகங்களில் உள்ள விளிம்பு நிலை குழுக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது. இதனால் அவர்கள் மாவோயிஸ்டு அல்லது பிரிவினைவாதிகளின் போக்குகளை வெளிப்படுத்துகிறார்கள்.

    மாணவர்கள் இயக்கம், போராட்டம் என்பது ஒரு வகை. ஆனால் ஜிகாதிகள், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாத இயக்கங்கள் அந்த போராட்டத்தில் இணைந்துகொள்வது மாறுபட்டது. இது இரண்டையும் நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இதுபோன்ற சக்திகள் மாணவர் போராட்டத்தில் இணைவதை ஒரு அரசியல் கட்சி ஆதரிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×