search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்

    பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
    கொல்கத்தா:

    குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரெயில் நிலையம், வீடுகள் மற்றும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தண்டவாளங்களிலும் டயர்களை வைத்து எரித்தனர். இந்த வன்முறைப் போராட்டம் காரணமாக பல மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியது.

    இந்நிலையில், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியின்போது மம்தா பேசியதாவது:-

    இப்படியே விட்டால் பாஜக மட்டுமே இங்கு இருக்கும். மற்ற அனைவரையும் வெளியேறச் செய்வார்கள். அது அவர்களின் அரசியல். அது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் சொந்தம். குடியுரிமைச் சட்டம் யாருக்கானது? நாம் அனைவரும் குடிமக்கள். நீங்கள் வாக்களிக்கவில்லையா? நீங்கள் இங்கே வாழ வில்லையா?

    ஒருசமயம் நான் தனித்து போராடினேன். இன்று, குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என டெல்லி முதல்வர் சொல்கிறார். பீகார் முதல்வரும் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார். குடியுரிமைச் சட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதேபோல் எல்லோரும்  சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். 

    மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டம்

    நீங்கள் நினைத்தால் எனது அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய முடியும். ஆனால், மேற்கு வங்காளத்தில் குடியுரிமை சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    போராட்டத்தின்போது சில ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால், மத்திய அரசு மேற்கு வங்காளத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெயில் சேவையை நிறுத்தி உள்ளது. 

    சட்டம் ஒழுங்கு குறித்து மற்றவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு முன்பாக, பாஜக ஆட்சி செய்யும் வடகிழக்கு மாநிலங்களை கவனிக்க வேண்டும். வங்காளத்திற்கு வெளியில் இருந்து வந்த சில சக்திகள், முஸ்லீம் சமுதாய நண்பர்கள் என்ற பெயரில் தீ வைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×