search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீரட் சிறையில் கொலையாளி பணி செய்யும் பவன் ஜலாத் மற்றும் நிர்பயா குற்றவாளிகள்
    X
    மீரட் சிறையில் கொலையாளி பணி செய்யும் பவன் ஜலாத் மற்றும் நிர்பயா குற்றவாளிகள்

    நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் - மீரட் சிறை ஊழியர்

    நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட தயாராக இருப்பதாக மீரட் சிறையில் குற்றாளிகளை தூக்கிலிடும் பணியாற்றும் ஊழியர் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயாவை ஆறுபேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. 

    இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ம் தேதி அவர் உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான். 

    இந்த வழக்கில் 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டான். சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு தனது தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து விடுவிக்கப்பட்டான். 

    மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்‌ஷய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. 

    ஐதராபாத்தில் இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற 4 வாலிபர்களை என்கவுண்டர் நடத்தி போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆனால் 7 ஆண்டுகளாகியும் டெல்லி குற்றவாளிகளுக்கு மட்டும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படாதது ஏன் என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பிவருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து டெல்லி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை டெல்லி திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். 

    டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கான ஊழியர் யாரும் இல்லை. இதனால் உத்திரபிரதேச சிறைத்துறையில் குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் உள்ள ஊழியர்களின் பட்டியலை அனுப்புமாறு திகார் சிறை நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 

    இந்நிலையில், நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் என்று உத்திரபிரதேச மாநிலம் மீரட் சிறையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணி செய்யும் பவன் ஜலாத்(55) தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறுகையில்,' திகார் சிறை நிர்வாகம் உத்திரபிரதேச அரசிடம் தங்களுக்கு இரண்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணி  செய்யும் ஊழியர்கள் உடனடியாக வேண்டும் என கேட்டுள்ளது.லக்னோ  சிறையில்  தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

    மீரட் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கினால் நிர்பயா குற்றாவாளிகளை தூக்கிலிட நான் தயாராக உள்ளேன். எனது தாத்தாவும், ஏற்கனவே அப்பாவும் சிறையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் வேலை செய்துள்ளனர்’ என தெரிவித்தார்.

    இதற்கிடையில், நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான அக்‌ஷய்குமார் தனது தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் 17-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×