search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற கட்டிடம், டெல்லி
    X
    பாராளுமன்ற கட்டிடம், டெல்லி

    பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    இந்த ஆண்டின் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

    குறிப்பாக, கடுமையான எதிர்ப்பு,  காரசாரமான வாக்குவாதத்துக்கு பின்னர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன.

    இந்நிலையில்,  நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது நேற்று தெரிவித்த ஒரு கருத்து ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்திக்க நேர்ந்தது.

    இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

    ராஜ்நாத் சிங் கண்டனம்

    இப்படிப்பட்ட உறுப்பினர்கள் இந்த அவையில் அமருவதற்கே அருகதையற்றவர்கள் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

    இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதைதொடர்ந்து, பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெடித்துள்ள கலவரம் மற்றும் அசாமில் போலீசாரால் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றை முன்வைத்து மாநிலங்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மத்திய மந்திரிகள் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டவாறு அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால், மாநிலங்களவையில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடித்ததால் பிற்பகல் ஒரு மணிவரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்தார். ஒரு மணிக்கு பின்னரும் இதே நிலைமை நீடித்ததால் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×