search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
    X
    குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: அசாம், திரிபுராவில் கலவரம்- தீவைப்பு

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
    கவுகாத்தி:

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது.

    இந்த 3 நாடுகளிலும் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களில் முஸ்லிம்கள் தவிர இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அகதிகளாக வந்தவர்கள் 11 ஆண்டுகளுக்கு பதில் 5 ஆண்டுகள் வசித்தாலே போதும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்றும் சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குடியுரிமை சட்டத்திருத்தம் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையிலும் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அந்த சட்டதிருத்தம் அதிகாரப்பூர்வமாக சட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்தியாவின் வடகிழக்கில் அருணாசலபிரதேசம், அசாம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய 7 மாநிலங்கள் உள்ளன. 7 சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் இந்த மாநிலங்களில் மிசோரம், மேகாலயா இரு மாநிலங்களும் பழங்குடியினர் நிர்வாக பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாசலபிரதேசம் நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் அசாம், திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளிலும் அனுமதி சீட்டு பெற்று செல்லும் நடைமுறை உள்ளது.  எனவே இந்த மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. என்றாலும் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. நேற்று அது மிகப்பெரும் கலவரமாக மாறியது.

    அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் அமைப்புகள் முன்நின்று போராட்டத்தை நடத்துகின்றன. இதனால் போராட்டம் வலுத்தபடி உள்ளது. தலைநகர் கவுகாத்தியில் நேற்று மாணவர்கள் தலைமைச் செயலகம் உள்பட பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி

    போலீசார் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை, தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பஸ் நிறுத்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    அசாம் தலைநகர் கவுகாத்தி மட்டுமின்றி லகீம்பூர், தேமாஜி, தின்சுகியா, திப்ரூகர், சடியோ, சிவசாகர், ஜோர்கட், கோலாகாட், கம்ரூப், பெங்கைகான் ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று காலை முதல் போராட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனால் அசாமில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தொடர் போராட்டங்கள் காரணமாக அசாமில் வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டக்காரர்கள் தீவைப்பில் ஈடுபடுவதால் ரெயில் போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் போக்குவரத்து போன்று அசாமில் விமான சேவையிலும் இன்று பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பயணிகள் திப்ரூகர் விமான நிலையத்துக்கு வர முடியவில்லை. இதனால் திப்ரூகர்- கொல்கத்தா விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்தது.

    அது போல கவுகாத்தி- கொல்கத்தா இடையிலான இரு விமான சேவையை விஸ்தரா விமான நிறுவனம் ரத்து செய்தது. ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் நிறுவனங்களும் தங்களது விமான சேவையில் மாற்றங்கள் செய்துள்ளன.

    அசாம் மாநிலத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று 4-ம் நாள் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக போட்டியை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

    இதற்கிடையே இன்று பகல் 11 மணிக்கு மாணவர் அமைப்புகள் திரண்டுவந்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டம் நடைபெற்றது.

    அசாம் போன்று திரிபுரா மாநிலத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மக்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மூன்றாவது நாளாக திரிபுராவில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. அசாம், திரிபுரா இரு மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும் இணைய தளங்கள் மூலம் வதந்தி பரவியதால் கலவரம் நீடித்தபடி உள்ளது.

    இதையடுத்து திரிபுரா மாநிலம் முழுவதும் அசாமில் 10 மாவட்டங்களிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. அசாம், திரிபுரா மாநிலங்களில் மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் தீவிரம் அடைந்ததால் அசாம் முதல்-மந்திரி சோனோலால்  கவுகாத்தி விமான நிலையத்தில் சிக்க நேரிட்டது. சாலைகளில் டயர்கள் எரிக்கப்பட்டதால் அவரால் புறப்பட்டு செல்ல இயலவில்லை. பிறகு போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார்.

    கவுகாத்தியில் மத்திய மந்திரி ரமேஷ்வர் வீடு நோக்கி போராட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் முடிவில் மத்திய மந்திரி வீட்டின் ஒரு பகுதிக்கு கலவரக்காரர்கள் தீவைத்தனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.

    திரிபுரா மாநிலம் அகர்தாவாவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள காட்சி.

    அசாம், திரிபுரா இரு மாநிலங்களிலும் கலவரம் அதிகமானதால் ராணுவ வீரர்களும், துணை நிலை ராணுவ வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக அசாமுக்கு 2000 வீரர்களை கொண்ட 20 கம்பெனி ராணுவப்படை விரைந்துள்ளது. அவர்கள் கவுகாத்தி, திப்ரூகர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    திரிபுரா மாநிலத்துக்கு ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் நேற்று ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினார்கள். முக்கிய சந்திப்பு பகுதிகளில் துணை நிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கலவரம் பரவுவதை தடுக்க கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கவுகாத்தியில் நேற்று இரவு 6 வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பதட்டம் அதிகரித்தது. பாதுகாப்பு படையின் மீது கல் வீச்சும் நடந்தது. இதனால் கவுகாத்தியில் இன்று 4-வது நாளாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    கலவரம் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் மாணவர்கள் என்பதால், அவர்களை சமாளிப்பது பற்றி அசாம் மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே மாணவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் திரிபுராவில் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனால் திரிபுராவில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டுபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×