search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் நடைபெற்றுவரும் போராட்டம்
    X
    அசாமில் நடைபெற்றுவரும் போராட்டம்

    தேசிய குடியுரிமை விவகாரம்: அசாமில் இணையதள சேவை துண்டிப்பு

    அசாமில் தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க அங்குள்ள 10 மாவட்டங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
    கவுகாத்தி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 

    மேலும், இந்த மசோதா தொடர்பான விவாதம் இன்று மாநிலங்களவையில் நடைபெற்றுவருகிறது.  

    இதற்கிடையில்,  குடியுரிமை சட்ட திருத்தத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி இன மக்களின் தனித்துவம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும், இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

    இந்த மசோதா சட்டமாக நிறைவேறும்பட்சத்தில் வங்கதேசத்தில் இருந்து தங்கள் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை அளித்தால் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்ற பயத்தில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. 

    இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் தவறான செய்திகளும், வதந்தியும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.  

    அசாமில் நடைபெற்றுவரும் போராட்டம்

    அசாம் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவற்றை தீ வைத்தும் கொளுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள டிப்ருஹா, சிவசஹர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

    இந்நிலையில், போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவரும் அசாம் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் போலி செய்திகள், அசம்பாவித சம்பவங்கள் பரவுவதை தடுக்க 24 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி முதல் நாளை மாலை 7 மணி வரை) இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுவதாக மாவட்டநிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

    மேலும், டிப்ருஹா மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபானக்கடைகள் மாலை 4 மணி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×