search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவையில் பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், திருச்சி சிவா.
    X
    மாநிலங்களவையில் பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், திருச்சி சிவா.

    குடியுரிமை மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம்: அ.தி.மு.க. ஆதரவு- தி.மு.க. எதிர்ப்பு

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

    இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை மந்திரி  அமித் ஷா தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக கூறினார்.

    அமித் ஷா

    சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர்கள் எப்போதும் இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள். எனவே, தேசிய குடியுரிமை மசோதா குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை என அமித் ஷா கூறினார்.

    அதன்பின்னர் மசோதா மீது விவாதம் தொடங்கியது. அப்போது, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக ஆதரவு தெரிவித்தது.

    விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ‘தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி நீங்கள் சட்டத்தை உருவாக்கினால், அதன்பின்னர் சிறுபான்மையினர் மீதான விளைவுகளுக்கு யார் பொறுப்பு? அதனால்தான் இந்த மசோதாவை எதிர்க்கிறோம். நாட்டைக் கெடுக்க வேண்டாம், அரசியலமைப்பைக் கெடுக்க வேண்டாம். இதுதான் எனது கோரிக்கை’ என்றார்.

    திமுக எம்பி திருச்சி சிவா பேசும்போது, ‘இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது நமது மதச்சார்பின்மைக்கு விழுந்த அடியாக இருக்கும். ஒரு சாராரை மட்டும் பிரித்து பார்க்க கூடாது’ என்றார்.

    அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசும்போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று கூறினார். 

    அதேசமயம், ‘அண்டை நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் வழிவகை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவும் மசோதாவில் வழிவகை செய்ய வேண்டும்’ என்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினார். 
    Next Story
    ×