search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் போராட்டம் நடந்தது.
    X
    குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் போராட்டம் நடந்தது.

    குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது

    பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறுவதன் மூலம் குடியுரிமை சட்ட திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக அமலுக்கு கொண்டுவர உள்ள நிலையில் அச்சட்ட திருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது, பிரிவினை செய்யப்பட்டதால் புதிதாக உருவான பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மத ரீதியாக அடித்து விரட்டப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து பல கோடி பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அப்படி அகதிகளாக நுழைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 1955-ம் ஆண்டு மத்திய அரசு நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து குடியுரிமை சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்தில் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தவர்கள். தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. எனவே குடியுரிமை சட்டத்தை திருத்தி அகதிகளாக இருக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை தெரிவிக்கப்பட்டு வந்தது.

    அத்தகைய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு, குடியுரிமை சட்டத்தில் 2 முக்கிய திருத்தங்களை செய்தது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில் கடந்த 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்குள் ஊடுருவி குடியேறியவர்கள் 5 ஆண்டுகளாக வாழ்ந்திருந்தாலேபோதும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க தற்போதைய சட்டத்திருத்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கு இந்த சட்ட திருத்தம் பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு காங்கிரசும், அதன் தோழமை கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. என்றாலும் பாராளுமன்ற மக்களவையில் இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. இன்று மாநிலங்களவையிலும் இந்த சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட உள்ளது.

    பாராளுமன்றம்

    பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறுவதன் மூலம் குடியுரிமை சட்ட திருத்தங்களை உடனடியாக அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இதை தடுக்க காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    குடியுரிமை சட்ட திருத்தத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி இன மக்களின் தனித்துவம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இருந்து தங்கள் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை அளித்தால் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்ற பயத்தில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

    அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் மிக கடுமையாக உள்ளது. அசாம் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பல இடங்களில் சாலைகளில் டயர்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியது.

    திரிபுராவில் முழு அடைப்பு நடந்த போதும், சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் நேற்று முதல் அம்மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அம்மாநில மாணவர்கள் சங்க அமைப்புகள் அறிவித்துள்ளன.

    மேகாலயா மாநிலத்திலும் மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்று 2-வது நாளாக மேகாலயா தலைநகர் சில்லாங்கில் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. அருணாசல பிரதேசத்தில் மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

    நாகலாந்து மாநிலத்தில் மாணவர் அமைப்புகளுடன் அரசு ஊழியர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நேற்று கடைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சந்தைகள் மூடப்பட்டு இருந்தன.

    இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடந்தது. வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி, அகதிகளாக இருக்கும் வங்காளிகளுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது என்று ஆர்ப்பாட்டங்களில் கோ‌ஷமிடப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டத்தின் தாக்கம் காரணமாக இன்று வடகிழக்கு மாநிலங்களில் பதட்டம் நீடித்தது.
    Next Story
    ×