search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனோகர் ஜோஷி
    X
    மனோகர் ஜோஷி

    பாஜகவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேரும்: மனோகர் ஜோஷி

    பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி கூறினார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் மோதல் காரணமாக 30 ஆண்டுகால கூட்டணி உடைந்து, பல அரசியல் குழப்பங்களுக்கு பின் கொள்கை அடிப்படையில் வேறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் குறைந்தபட்ச செயல்திட்டம் மூலம் சிவசேனா தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்து உள்ளது.

    இந்த புதிய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாவும் பதவி ஏற்றனர். 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் மந்திரிகளுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    ஆளும் கட்சிகள் இடையே இலாகா ஒதுக்கீடு, மந்திரி சபை விரிவாக்கம் போன்ற விஷயத்தில் இறுதி முடிவுக்கு வருவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேரும் என சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

    பாஜக, சிவசேனா

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் சிறிய பிரச்சினைகளுக்காக போராடுவதற்கு பதிலாக, அவற்றை பொறுத்துக்கொள்வது நல்லது. நீங்கள் வலுவாக உணரும் சிக்கல்களைப் பகிர்ந்து கொள்வது சிறப்பானது.

    இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அது இருவருக்கும் நன்மை பயக்கும். 2 கட்சிகளும் விரைவில் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சித்தாந்த அடிப்படையில் முரண்பட்ட இந்த 3 கட்சிகளின் அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என பாரதீய ஜனதா கூறி வரும் நிலையில், மனோகர் ஜோஷியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×