search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற கட்டிடம், டெல்லி
    X
    பாராளுமன்ற கட்டிடம், டெல்லி

    தனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது

    பாராளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளில் தனி தொகுதி ஒதுக்கீட்டு முறையை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 336-வது பிரிவின்படி, பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர்(எஸ்.சி) மற்றும் பழங்குடியினருக்கென (எஸ்.டி) தனி தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.  இந்த தொகுதிகளில் அந்த பிரிவினர் மட்டுமே போட்டியிட முடியும்.

    எனினும், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, குறிப்பிட்ட காலம் வரைதான் இந்த இடஒதுக்கீடு முறை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும், எஸ்சி, எஸ்.டி. மக்களின் நலன் கருதி
    கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த ஒதுக்கீடு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

    முன்னர் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட  இந்த ஒதுக்கீடு வரும் ஜனவரி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    மக்களவையில் ரவி சங்கர் பிரசாத்

    இதைதொடர்ந்து, பாராளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளில் தனி தொகுதி ஒதுக்கீட்டு முறையை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். 

    இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பின்னர் இன்று மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் 352 எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்தனர். எதிர்த்து யாருமே வாக்களிக்காமல் இன்று இந்த மசோதார் மக்களவையால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த நடைமுறை வரும் 2030-ம் ஆண்டுவரை நீட்டிக்கப்படும்.

    இந்த தனிதொகுதி ஒதுக்கீட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது பாராளுமன்ற மக்களவையில் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த 84 உறுப்பினர்களும் பழங்குடியினத்தை சேர்ந்த 47 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சட்டசபைகளில் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த 614 உறுப்பினர்களும் பழங்குடியினத்தை சேர்ந்த 554 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், பாராளுமன்ற மக்களவை மற்றும் சில மாநில சட்டசபைகளில் ‘ஆங்கிலோ இந்தியர்கள்’ எனப்படும் கிறிஸ்தவர்களுக்கு நியமன இடங்கள் அளிக்கப்படுவதும் பல ஆண்டுகால மரபாக உள்ளது.

    இந்த ஒதுக்கீட்டுக்கான நீட்டிப்பு தொடர்பான முந்தைய நீட்டிப்பும் வரும் ஜனவரி 25-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்த ஒதுக்கீட்டை மேலும் நீட்டிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை.
    Next Story
    ×