search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    நித்யானந்தா இருக்கும் இடம் பற்றி 12-ந்தேதிக்குள் தெரிவிக்க கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    நித்யானந்தா தங்கி இருக்கும் இடம் குறித்த விவரங்களை 12-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு, போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரது ஆசிரமத்தில் பெண் சீடராக இருந்த ஆர்த்திராவ், நித்யானந்தா மீது கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு ராமநகர் மாவட்ட 3-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும், அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில், நித்யானந்தா மீதான வழக்கு நேற்று நீதிபதி சித்தலிங்கபிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இதையடுத்து, நித்யானந்தாவிடம் இதற்கு முன்பு கார் டிரைவராக இருந்த லெனின் கருப்பன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி இருப்பதால், நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஆர்த்திராவ் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர்.

    அதே நேரத்தில் நித்யானந்தா சாமியார் தரப்பில் வக்கீல் நாகேஷ் ஆஜராகி வாதாடினார். அப்போது இந்த வழக்கில் விசாரணைக்கு நித்யானந்தா சாமியார் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று கூறி, கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த ஆவணங்களை நீதிபதியிடம் வக்கீல் நாகேஷ் வழங்கினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேவையில்லை என்றும், அவர் இல்லாமல் சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி சித்தலிங்கபிரபு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இன்று சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா சாமியாருக்கு, தற்போது ராமநகர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டியதில்லை என்று உத்தரவிட்டு இருப்பது, அவருக்கு சாதகமாகி உள்ளது.

    இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியாரிடம் இதற்கு முன்பு கார் டிரைவராக இருந்த லெனின் கருப்பன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நித்யானந்தா மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்துள்ள பாலியல் தொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட 3-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 44 முறை விசாரணைக்கு ஆஜராகாமல் நித்யானந்தா இருந்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அதனால் அவரை, விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராமநகர் மாவட்ட 3-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த விவரங்களை வருகிற 12-ந் தேதிக்குள் கர்நாடக அரசும், போலீசாரும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
    Next Story
    ×