search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி எடியூரப்பா
    X
    முதல் மந்திரி எடியூரப்பா

    கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் - 12 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி

    கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.

    காங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
     
    இந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. 

    இந்நிலையில்,  கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

    15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×