search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனுக்கு இனிப்பு ஊட்டி வெற்றியை கொண்டாடும் எடியூரப்பா
    X
    மகனுக்கு இனிப்பு ஊட்டி வெற்றியை கொண்டாடும் எடியூரப்பா

    கர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது

    கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், எடியூரப்பா அரசு தப்பியது.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தனி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா-105, காங்கிரஸ்-78, மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களில் வெற்றி பெற்றன.

    இதையடுத்து பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. முதல்-மந்திரி பதவியையும் விட்டுக் கொடுத்தது. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்த இடையூறுகளால் குமாரசாமியால் நிம்மதியாக ஆட்சி நடத்த இயலவில்லை. இந்த நிலையில் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதோடு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியும் உடைந்தது.

    இதையடுத்து கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 105 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்- மந்திரியாக பொறுப்பேற்றார். பதவி விலகிய 17 பேரும் எடியூரப்பாவுக்கு ஆதரவளித்தனர்.

    இந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அத்தானி, காக்வாட், கோகாக், எல்லா புரா, ஹுரேகேரூர், ரானி பென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஹொஸ்கேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக 11 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    8.15 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 8.30 மணிக்கு முன்னிலை நில வரம் தெரியத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றனர். 

    ஹுன்சூர், சிவாஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பெற்றது. யஷ்வந்த்பூர் மற்றும் கே.ஆர்.பேட் ஆகிய இரு தொகுதிகளிலும் குமார சாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலையில் இருந்தது. ஹொஸ்கேட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத்பசே கவுடா அதிக வாக்குகளுடன் பா.ஜ.க. வேட்பாளர் நாக ராஜை பின்னுக்கு தள்ளி முன்னிலைப் பெற்றார்.

    மற்ற 10 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வேட் பாளர்கள் முன்னிலை பெற்றனர். அடுத்தடுத்து சுற்றுக்களின் போது பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகா மாநில பா.ஜ.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர்.

    பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடினார்கள்.

    இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் பாஜக ஆதரவாளர்கள்

    9.30 மணி அளவில் கே.ஆர்.பேட் தொகுதியின் முன்னிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அங்கு முன்னிலையில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் தேவராஜ் திடீரென பின்தங்கினார்.

    பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் நாராயண கவுடா முன்னிலை பெற்றார். அதுபோல யஷ்வந்த்பூர் தொகுதியிலும் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு பாரதீய ஜனதா வேட்பாளர் முன்னிலைக்கு வந்தார். இதனால் ஓட்டு எண்ணிக்கை நடந்த 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. 7 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தபோது பா.ஜ.க. முன்னிலை பெற்றிருந்தது. 12 தொகுதிகளிலும் அதிக வாக்குகளுடன் முன்னணியில் இருந்தது.

    15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் மூன்று கட்சிகளும் 15 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. இதன் காரணமாக 15 தொகுதிகளிலும் மிக, மிக கடுமையான மும்முனைப் போட்டி இருந்தது.

    15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி வாய்ப்பு உருவாகி இருப்பதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பி உள்ளது.

    மெஜாரிட்டிக்கு 113 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எடியூரப்பாவுக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் பலம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    மக்கள் மிகச் சிறந்த தீர்ப்பை வழங்கியதற்காக மகிழ்ச்சி அடைவதாக எடியூரப்பா கூறி உள்ளார். இப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல், மக்கள் சார்பு மற்றும் நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×