search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

    இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை. பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளிக்கும். 

    இந்த அகதிகள், குடியுரிமை பெறுவதற்கு அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும். மசோதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பட்டியலில் முஸ்லிம்கள் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 
    Next Story
    ×