search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
    X
    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

    பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து

    இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நலிந்த நிலையில் உள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்க உதவும் யோசனைகள் என்ற தலைப்பில் ஒரு ஆங்கில வார இதழில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் வளர்ச்சி மந்தநிலை நிலவுகிறது. பொருளாதாரத்தில் ஆழ்ந்த சோர்வு காணப்படுகிறது. இந்த பின்னடைவை சரி செய்ய முதலில் இந்த பிரச்சினையை மோடி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

    அதன் தீவிரத்தன்மையை அங்கீகரிப்பதுடன், விமர்சிப்பவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. இது தற்காலிகமான பிரச்சினை என்று கருதுவதை நிறுத்த வேண்டும். தங்களுக்கு அசவுகரியமான செய்திகளை முடக்கக்கூடாது.

    மூலதன சந்தை, நில சந்தை, தொழிலாளர் சந்தைகளில் தாராளமய சீர்திருத்தங்களை புகுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் சட்டங்கள் ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா சேர வேண்டும். போட்டியையும், உள்நாட்டு திறனையும் அதிகரிக்க இது அவசியம்.

    பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. முடிவு எடுப்பது மட்டுமின்றி, யோசனைகள், திட்டங்கள் ஆகியவை பிரதமரை சுற்றியும், பிரதமர் அலுவலகத்திலும் இருக்கிற தனிநபர்களிடம் இருந்தே வருகின்றன. அது, அரசியல் செயல்திட்டத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், பொருளாதாரத்துக்கு அது உதவவில்லை.

    மந்திரிகள் அதிகாரமற்றவர் களாக இருக்கிறார்கள். அவர் களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். 15-வது நிதி கமிஷனில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதே சமயத்தில், மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கை குறைக்கக்கூடாது. பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தியது முக்கியமான சாதனை.

    நடுத்தர வகுப்பினருக்கான வருமான வரி விகிதத்தை தற்போதைக்கு குறைக்கக்கூடாது. அதில் கிடைக்கும் நிதி ஆதாரத்தை 100 நாள் வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

    ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவது சாத்தியமற்றதாகவே தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×