search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

    தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கோர்ட்டு வழக்குகளால் அப்போது தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பை செய்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு தி.மு.க.வின் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த நேரத்தில் கடந்த 2-ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சிக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

    கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் ஏற்கனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, விழுப்புரம் என மொத்தம் 9 மாவட்டங்களில் மறு வரையறை பணிகள் முடியவில்லை.

    9 மாவட்டங்களில் மறுவரையறை பணிகளை சட்ட ரீதியாக முடிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் அவசர கதியாக ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    திமுக

    தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் வக்கீல் பதில் அளிக்கும்போது, “தொகுதி இடஒதுக்கீடு, மறுவரையறை பணிகள் எல்லாம் முடிந்து விட்டன என்றும், புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இதுபோன்ற சூழலில் தேர்தல் நடத்தப்படுவதால் குழப்பம் ஏற்படாதா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதன் பின்னர் தி.மு.க. சார்பிலும், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 6 பேரும் தங்கள் தரப்பு வாதங்களை விரிவாக எடுத்துக் கூறினர். அப்போது உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நாம் நடக்க வேண்டும். தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும் என்று கூறினார்கள்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு எந்த கோர்ட்டாலும் தேர்தலை தள்ளிப்போட முடியாது என்று கூறியது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் முறையான விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றால் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்று கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த மாவட்டங்களில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்கள்.

    ஒட்டு மொத்தமாக தேர்தலை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    புதிய மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, தேர்தல் ஆணையம் சொல்வது போன்று 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்தினால், பின்னர் நடைபெறும் தேர்தல்களில் இந்த தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இறுதியாக வலியுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் வாதங்கள் முடிந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இன்று காலை 10.30 மணி அளவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

    பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்ட அமர்வு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    9 மாவட்டங்களுக்கு 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
    Next Story
    ×