search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன்
    X
    ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன்

    ''நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

    தான் வெங்காயம் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை ஆகையால் தனக்கு கவலை இல்லை என கூறிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ‘அவர் என்ன அவகோடாவா சாப்பிடுகிறார்?’ என ப.சிதம்பரம் பதிலடி அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தேசியவாத கட்சி தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியை சேர்ந்த எம்.பி.யுமான சுப்ரியா சுலே நாட்டில் நிலவிவரும் வெங்காய விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    அவர் பேசியதாவது:- ’எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் எகிப்து வெங்காயம் உண்பதில் மகிழ்ச்சியடையவில்லை. 

    இந்தியா அங்கிருந்து ஏன் இறக்குமதி செய்யவேண்டும்? நாம் நமது விவசாயிகளை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார். 

    இதையடுத்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தனது இருக்கையில் இருந்து எழுந்து பேச தொடங்கினார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ’நீங்கள் எகிப்து வெங்காயங்களை சாப்பிடுவீர்களா?’ என சத்தமாக கேள்வி எழுப்பினார். 

    அந்த உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், 'நான் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகம் சாப்பிடமாட்டேன். ஆகையால் கவலையில்லை. வெங்காயம் ஒரு விஷயம் இல்லை என்ற நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து நான் வந்துள்ளேன்’ என தெரிவித்தார். 

    இந்நிலையில், வெங்காயத்தை அதிகம் சாப்பிடமாட்டேன் எனக்கூறிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். 

    அவகோடா (வெண்ணெய் பழம்)

    இது குறித்து இன்று பாராளுமன்ற வளாகத்தில் வெங்காய விலை உயர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
     
    நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின் போது நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தான் வெங்காயத்தை சாப்பிடமாட்டேன் எனவும் மேலும், அது பற்றி கவலை இல்லை எனவும் கூறியுள்ளார். 

    அவர் வெங்காயம் சாப்பிடவில்லை என்றால் என்ன சாப்பிடுவார்? அவகோடாவா? (வெண்ணெய் பழம்). 

    நான் ஒன்றும் நிதிமந்திரியை கிண்டல் அடிக்கவில்லை. நான் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளேன். வெங்காயத்தை தற்போது இறக்குமதி செய்வதால் என்ன பயன்? எப்போது வெங்காயம் இந்தியாவுக்கு வரும்? மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட்டு எடுத்திருக்க வேண்டும்.

    நிதிமந்திரி தான் வெங்காயம் சாப்பிடமாட்டேன் ஆகையால் கவலை இல்லை என கூறும் கருத்து இந்த பாஜக அரசாங்கத்தின் மனநிலையை காட்டுகிறது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறிய வெங்காயம் தொடர்பான கருத்து சமூக வலைதளங்களில் வெவ்வேறு கோணங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×