search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
    X
    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

    2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு - அமித்ஷா காலக்கெடு

    2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். அதன்பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அமித்ஷா கூறினார்.
    சக்ரதார்புர்:

    ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி அங்குள்ள சக்ரதார்புரில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அதன்பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

    ராகுல் காந்தி, அவர்களை வெளியேற்றாதீர்கள், அவர்கள் எங்கே செல்வார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? என்று கேட்கிறார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

    ஜார்கண்ட் தேர்தலில் வளர்ச்சி உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளுடன் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற தேசிய பிரச்சினைகளும் முக்கிய இடம் பெறும்.

    காங்கிரஸ் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ராமஜென்ம பூமி வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று கூறினார்கள். உங்கள் ஆதரவுடன் நாங்கள் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன் பலன்தான் சுப்ரீம் கோர்ட்டு அயோத்தியில் ராமர் கோவில் மட்டுமே கட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜார்கண்ட் மாநில நலனுக்காக போராட்டிய மாணவர்கள் மீது தடியடியும், துப்பாக்கி சூடும் நடத்தியது. இப்போது அதே காங்கிரசின் மடியில் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்) உட்கார்ந்து இருக்கிறார். அப்போதுதான் தன்னால் முதல்-மந்திரியாக முடியும் என்று கருதுகிறார்.

    20 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர். 5 வருடங்களில் நரேந்திர மோடி அரசும், இந்த மாநில அரசும் நக்சலைட்களை ஒழித்துள்ளன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதை வகுத்துள்ளனர்.

    ஜார்கண்ட் வரலாற்றில் இங்கு முதல் முறையாக பா.ஜனதா அரசு முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மையையும், ஊழலற்ற தன்மையையும் மாநில அரசு நிகழ்த்தியுள்ளது.

    ராகுல் காந்தியும் இங்கு வந்துள்ளார். நான் அவருக்கு சவால் விடுகிறேன், 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு என்ன செய்துள்ளது? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். நாங்களும் 5 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை சொல்கிறோம்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.
    Next Story
    ×