search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    எய்ம்ஸ் மருத்துவமனை வங்கி கணக்குகளில் ரூ.12 கோடி திருட்டு - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கண்டுபிடித்தது

    எய்ம்ஸ் மருத்துவமனை வங்கி கணக்குகளில் போலி காசோலைகள் மூலம் ரூ.12 கோடி திருடப்பட்டு இருந்ததை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கண்டுபிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் புகழ் பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் வருவாய் பணம் டெல்லியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் பணத்தை செலுத்துவதில் மாறுபட்ட சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வரும் காசோலைகளை ஆய்வு செய்தனர். அப்போது காசோலைகள் போலியாக தயார் செய்யப்பட்டு முறைகேடுகள் நடப்பது தெரிய வந்தது. எய்ம்ஸ் நிறுவனம் கொடுத்த காசோலை என்ற பெயரில் அதிகளவு பணம் எடுப்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் பொருளாதார விவகாரங்களுக்கான குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்ததாக டெல்லி, மும்பை, டேராடூன் நகரங்களில் ஸ்டேட் பாங்க் வங்கி கிளைகளில் கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. போலி காசோலைகள் மூலம் ரூ.12 கோடி திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் பெயரில் காசோலையை தயாரித்த கும்பலை தேடி வருகிறார்கள். இந்த முறைகேடுக்கு மருத்துவமனை ஊழியர்கள் யாராவது துணை போனார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×