search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரக்யாசிங்
    X
    பிரக்யாசிங்

    கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று பேசியதால் பாராளுமன்ற குழுவில் இருந்து பிரக்யாசிங் நீக்கம்

    கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று பேசியதால், பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து பா.ஜனதா எம்.பி. பிரக்யாசிங் நீக்கப்பட்டார். எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு பா.ஜனதா தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி :

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பெண் சாமியார் பிரக்யாசிங். இவர் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். சமீபத்தில், பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் பாராளுமன்ற மக்களவையில், பிரக்யாசிங் குறுக்கிட்டு பேசுகையில், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.

    இந்நிலையில், நேற்றும் அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கு பதில் அளித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அவர் கூறியதாவது:-

    கோட்சேவை தேச பக்தர் என்று கூறுவதை நாங்கள் கண்டிக்கிறோம். அவரது சித்தாந்தம், அப்போதும், இப்போதும், இனிமேலும் பொருந்தக்கூடியவை. அவர் நாட்டுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்.

    ராஜ்நாத் சிங்கின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதாதளம், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.

    ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங்

    இந்நிலையில், கோட்சே பற்றிய புகழாரத்துக்காக, பிரக்யாசிங் மீது பா.ஜனதா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் பிரக்யாசிங் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. அத்தகைய கருத்தையோ, சித்தாந்தத்தையோ பா.ஜனதா ஒருபோதும் ஆதரிக்காது.

    ஆகவே, பிரக்யாசிங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்துள்ளோம். மேலும், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின்போது, பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரக்யாசிங் விளக்கம்

    இதற்கிடையே, புரட்சியாளர் உத்தம்சிங் பற்றிய கருத்துக்குத்தான் ஆட்சேபனை தெரிவித்ததாக பிரக்யாசிங் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புரட்சியாளர் உத்தம்சிங்கை அவமதித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் நான் அந்த கருத்தை தெரிவித்தேன். சில நேரங்களில் பொய் புயல் பெரிதாக தோன்றும். ஆனால், அந்த புயலில் மக்கள் மயங்கி விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×