search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே.
    X
    கூட்டணி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே.

    உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு தாக்கல்- அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பதற்கு எதிராக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே  முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா இன்று மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. 

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு தடை விதிக்கக்கோரி சில வழக்கறிஞர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    மும்பை உயர் நீதிமன்றம்

    அதில், தேர்தலுக்கு முன்பு அமைத்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாஜகவும் சிவசேனாவும் சேர்ந்து ஆட்சியமைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    எந்த அடிப்படையில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், செல்லாது என்றும் சொல்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

    இதற்கு பதிலளித்த மனுதாரர்களின் வழக்கறிஞர், சிவசேனாவும் பாஜகவும் இணைந்து அரசு அமைக்க வேண்டும் என்று விரும்பிய மக்களின் நம்பிக்கை மீறப்பட்டிருக்கிறது என்று கூறினார். இதுபற்றி கூறிய தலைமை நீதிபதி, திருமணச் சட்டங்களுக்கு விவாகரத்து என்ற கருத்து புதிதல்ல என்றார்.

    முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வும், இதே மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×